
சண்டகான், ஏப்ரல்-20-சபா, சண்டகானில் உள்ள Kampung Bahagia, Batu Sapi என்ற நீர்நிலை குடியிருப்பில் நேற்று அதிகாலை 1 மணிக்கு மேல் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், கிட்டத்தட்ட 1,000 வீடுகள் முற்றிலும் அழிந்துள்ளன.
இச்சம்பவத்தால் 9,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு, பலர் தங்களின் வீடுகளை இழந்துள்ளனர்.
அந்தப் பகுதியில் மொத்தம் 1,200 வீடுகள் இருந்ததாகவும், அவற்றில் பெரும்பாலானவை தீயில் சேதமடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.
இதையடுத்து ஞாயிறு அதிகாலை 4 மணிக்கு அவ்விடம் பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டது.
இதுவரை உயிரிழப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
ஆனால், சிலர் தங்கள் சொத்துகளை காப்பாற்ற முயன்றபோது காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் தற்போது தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மீட்பு மற்றும் உதவி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக, அவ்வீடுகள் கொழுந்து விட்டு எரிந்தது, பார்ப்பதற்கு காட்டுத் தீயைப் போல இருந்தது வைரலான வீடியோக்களில் தெரிந்தது.



