
சனா, அக்டோபர்-6 – சவூதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்கள், Aramco எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் இராணுவத் தளங்களைக் குறிவைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக, ஏமனின் ஹூத்தி கிளர்ச்சித் தரப்பு அறிவித்துள்ளது.
3 வெவ்வேறு தாக்குதல் நடவடிக்கைகளில் ஏராளமான ballistic மற்றும் cruise ஏவுகணைகளுடன் ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டதாக, ஹூத்தி இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
முதல் தாக்குதலில், ரியாத்தில் உள்ள மன்னர் காலிட் அனைத்துலக விமான நிலையம் குறிவைக்கப்பட்டதாகவும், இதனால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறிக் கொண்டார்.
இரண்டாவது தாக்குதலில், மெக்கா, ராபிக் பகுதியில் உள்ள Saudi Aramco எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தாக்கப்பட்டதாகவும், அங்கு தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
மூன்றாவது தாக்குதலில், Abha Airport, Khamis Mushait இராணுவ விமானத் தளம் மற்றும் Asir பகுதியில் உள்ள Akfa முகாம், அதோடு Najran மற்றும் Jazan பகுதிகளிலுள்ள முக்கிய இடங்களும் குறிவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் ஏமன் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 60 சவூதி வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஹூத்திகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சவூதி வான்பரப்பைப் பயன்படுத்தும் அனைத்துலக விமான நிறுவனங்களுக்கும் ஹூத்திகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும், ஹூத்திகளின் இந்தத் தாக்குதல் குறித்த கூற்றுகளை சவூதி அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.



