
புத்ராஜெயா, ஜூலை-17-சாலை விபத்துகளில் சிக்கி பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்கும் நடைமுறையை உருவாக்க அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதன் வழி அந்த அணுகுமுறையை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
சிறைத்தண்டனை, அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து போன்ற ஏற்கனவே உள்ள தண்டனைகளைத் தவிர்த்து இது குற்றவாளிகளுக்கு கூடுதல் தண்டனையாக அமையும். அதன் வழி பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தங்கள் செயல்களால் ஏற்பட்ட விளைவுகளுக்கு அவர்கள் பொறுப்பேற்பது உறுதி செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.
மது அல்லது போதைப்பொருட்களின் தாக்கத்தில் வாகனம் ஓட்டுதல், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் சாலை விபத்துகளுக்குக் காரணமாகும் பிற குற்றங்களுக்கும் அது பொருந்தும். தற்போது, குற்றவாளிகளுக்குச் சிறைத்தண்டனை அல்லது அபராதம் மட்டுமே விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் நடைமுறை இல்லை.
எனவே புதிய அணுகுமுறை குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட வகை செய்யும் என அந்தோணி லோக் மேலும் கூறினார்.
இருப்பினும், இழப்பீட்டுத் தொகை அரசால் நிர்ணயிக்கப்படாது என்றும், மாறாக ஒவ்வொரு வழக்கின் உண்மை மற்றும் அவற்றின் தன்மைகளின் அடிப்படையில் நீதிமன்றமே அதைத் தீர்மானிக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
தற்போது, பாதிக்கப்பட்டவர்களோ அல்லது அவர்களின் நெருங்கிய உறவினர்களோ சிவில் வழக்குகள் மூலமாக மட்டுமே இழப்பீடு கோர முடியும். அத்தகைய நடைமுறைக்குச் சட்டப் பிரதிநிதித்துவம் தேவைப்படுவதோடு அது முடிவுக்கு வர பல ஆண்டுகள் ஆகலாம் என்பதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.



