
போர்ட் கிள்ளான், மார்ச்-14 -கடந்த டிசம்பரில் வாகனங்களை ஏற்றிச் செல்லும் வழியில் தீப்பிடித்த சரக்குக் கப்பலிலிருந்த கார்கள் காணாமல் போயிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
மர்ம நபர்கள், கிள்ளான் துறைமுக வாகன சேமிப்புக் கிடங்கை உடைத்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலானக் கார்களைக் களவாடியிருப்பதாக, கப்பலின் உரிமையாளர்கள் போலீஸில் புகார் செய்துள்ளனர்.
கார்கள் களவுப் போன விஷயம் நேற்று நண்பகலில் தெரிய வந்ததாக, MV Malaysia Star நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் கூறினார்.
கும்பலொன்று சேமிப்புக் கிடங்கினுள் இருந்தவாறு டிக் டோக் நேரலை செய்யும் link இணைப்பு கிடைக்கப் பெற்றுள்ளது.
ஆனால் அந்த நேரலையில், அவர்கள் கார்களைத் திருடுவது காட்டப்படவில்லை.
இது ஒரு கிரிமினல் குற்றமாகும்; திருடியக் கார்களை அவர்கள் திருப்பி ஒப்படைத்தே ஆக வேண்டுமென Jeremy Joseph கூறினார்.
சட்ட நடவடிக்கைப் பாயும் முன்பாக கார்களைத் திருப்பித் தந்து விடுவது அவர்களுக்கு நல்லது என Jeremy சொன்னார்.
டிசம்பர் 2 ஆம் தேதி, கோத்தா கினாபாலுவுக்குச் செல்லும் வழியில், பத்து பஹாட்டின் தஞ்சோங் லாபுவிலிருந்து சுமார் ஒன்பது கடல் மைல் தொலைவில், அந்தக் கப்பல் தீப்பிடித்தது.
இதில் சில வாகனங்கள் சேதமடைந்தன.
இதனால் கப்பல் கிள்ளான் துறைமுகத்துக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு, 34 வாகனங்கள் அங்குள்ள கிடங்கொன்றில் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.