Latestசிங்கப்பூர்

சிறுமியின் தலையை அன்புடன் தடவிய 73 வயது முதியவர்; ஆத்திரத்தில் கீழே தள்ளிய தந்தை!

சிங்கப்பூர், ஆகஸ்ட் 17 — உணவகப் பகுதியில் குடும்பத்துடன் அமர்ந்திருந்த சிறுமியின் தலையை அன்புடன் தடவிய 73 வயது முதியவர் ஒருவர், அச்சிறுமியின் தந்தையால் கீழே தள்ளப்பட்ட சம்பவம் சிங்கப்பூரில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Roxy Square உணவகப் பகுதியில் ஒரு தம்பதியினர் தங்களது சிறுமியுடன் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தபோது சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த நேரத்தில் தந்தை உணவு எடுக்கச் சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

நடப்பதில் சிரமம் கொண்ட 73 வயது முதியவர், மேசைகளைப் பிடித்தபடி அப்பகுதியைக் கடந்து சென்றுள்ளார். அப்போது அருகில் அமர்ந்திருந்த சிறுமியைப் பார்த்த அவர், இயல்பான அன்பின் வெளிப்பாடாக குழந்தையின் தலையைத் தடவியுள்ளார்.

இதைக் கண்ட சிறுமியின் தாய் அதிருப்தி தெரிவித்து சத்தமிட்டதைத் தொடர்ந்து, அங்கு திரும்பிய தந்தைக்கும் முதியவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் அந்த 40 வயது தந்தை, முதியவரைப் பிடித்துத் தள்ளியதில் அவர் நிலைதடுமாறி தரையில் விழுந்தார். இந்த முழுச் சம்பவமும் அங்கிருந்த CCTV கேமராவில் பதிவாகியுள்ளது.

காணொளி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, முதியவரின் மகளும் சம்பவத்தைப் பகிர்ந்து, தந்தையைத் தள்ளிய நபர் யார் என்பதை அடையாளம் காண பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளார்.

இதையடுத்து சம்பவம் இணையவாசிகளிடையே பெரும் கவனத்தைப் பெற்றது. குறிப்பாக நடப்பதற்கே சிரமப்பட்ட முதியவர் கீழே தள்ளப்படும் காட்சியைப் பார்த்த பலரும் அவருக்கு ஆதரவாகவும் அனுதாபத்துடனும் கருத்துகளைப் பதிவிட்டனர்.

பின்னர் சம்பந்தப்பட்ட தந்தை முதியவரிடம் மன்னிப்புக் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது மகள் மீதான அதிக பாதுகாப்புணர்வில் அவ்வாறு நடந்துகொண்டதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

இதற்கிடையே, விவகாரத்தை மேலும் பெரிதுபடுத்த விரும்பாத முதியவரும் அவரது மன்னிப்பை ஏற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

எனினும், ஏற்கனவே கால் மற்றும் இடுப்புப் பகுதியில் பிரச்சனைகள் இருந்த முதியவருக்கு கீழே விழுந்ததற்குப் பிறகு முதுகுவலி ஏற்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் வைரலானதைத் தொடர்ந்து, குறைந்தது இரண்டு மருத்துவ நிலையங்கள் அவருக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்க முன்வந்துள்ளன.

இதனிடையே, சம்பவத்தில் தொடர்புடைய 40 வயது நபரை அடையாளம் கண்டுள்ள சிங்கப்பூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!