
செந்தோசா, ஏப்ரல்-28-சிலாங்கூரில் ‘688 ஆலயங்கள்’ அனுமதியின்றி இயங்குவதாக சட்டமன்றத்தில் வெளியிடப்பட்ட எண்ணிக்கையில் பெரும் குளறுபடிகள் இருப்பதாக, செந்தோசா உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது மக்களைக் குழப்பும் வகையில் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
NHTSC எனப்படும் தேசிய இந்து ஆலயங்கள் வழிகாட்டுதல் குழுவின் மூலம் செய்யப்பட்ட சரிபார்ப்புகள் மற்றும் பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், இந்த எண்ணிக்கை தவறானது என குணராஜ் சொன்னார்.
இந்த ‘688’ என்ற எண்ணிக்கையில், சிறிய சன்னதிகள், வீட்டுச் சன்னதிகள் மற்றும் தனிப்பட்ட வழிபாட்டுத் தலங்களும் ஆலயங்கள் எனக் கணக்கிடப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது…
இவையனைத்தையும் ‘ஆலயங்கள்’ என்று ஒரே பிரிவில் சேர்ப்பது முறையல்ல என அவர் வலியுறுத்தினார்.
சரியான தரவுகள் இல்லாமல் பெரிய எண்ணிக்கைகளை வெளியிட்டு மக்களை ‘ஆச்சரியப்படுத்த’ வேண்டாம் என்றும், இது குறித்து முறையான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
எந்தவொரு எண்ணிக்கையையும் வெளியிடுவதற்கு முன், ஆலயங்கள், சிறிய சன்னதிகள் மற்றும் தனிப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் எனத் தெளிவாக வகைப்படுத்தப்பட வேண்டும்.
துல்லியமான உண்மைகளே ஒரு சிறந்த கொள்கைக்கு அடிப்படையாகும் என்றார் அவர்.
ஏப்ரல் 16 வரைக்குமான நிலவரப்படி, சிலாங்கூரில் அரசாங்க மற்றும் தனியார் நிலங்களில் 688 இந்து ஆலயங்கள் அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக, ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. பாப்பாராயுடு முன்னதாக சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார்.



