
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-14- டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தம்புன் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக் கூடாது என்று அறிவிக்கக் கோரி வழக்கறிஞர் பி. வேதமூர்த்தி தொடர்ந்த வழக்கு சட்டப்படி செல்லுபடியாகாது என்கிறார் DAP-யைச் சேர்ந்த எம்.பி RSN ராயர்.
1954 ஆம் ஆண்டு தேர்தல் குற்றச் சட்டத்தின் கீழ், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிக்கு எதிராக எந்தவொரு சட்டப்பூர்வ சவாலும் தேர்தல் முடிவுகள் அரசாங்க பதிவேட்டில் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 21 நாட்களுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டுமென்பதை, வழக்கறிஞருமான ராயர் சுட்டிக் காட்டினார்.
எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.யாக பிரதமரை தகுதி நீக்கம் செய்ய வேதமூர்த்தி எடுத்த சட்ட நடவடிக்கை காலக்கெடுவை மீறியது என அவர் தெரிவித்தார்.
“தவிர, வழக்கைத் தாக்கல் செய்வதற்கு முன்பு, அன்வாரின் அரச மன்னிப்பு தொடர்பான ஆவணங்களை வேதமூர்த்தி பெற்றிருக்க வேண்டும்; அதைச் செய்யாமல், வழக்கை தாக்கல் செய்து விட்டு, பின்னர் அரச மன்னிப்பு தொடர்பான ஆவணங்களை பிரதமரை வழங்கச் சொல்வது தவறு என, அந்த ஜெலுத்தோங் எம்.பி சொன்னார்.
அன்வார் தனது அரச மன்னிப்பு மனுவின் முழு ஆவணங்களையும் 24 மணி நேரத்திற்குள் வெளியிட வேண்டும் என, Malaysian Advancement Party கட்சித் தலைவரான வேதமூர்த்தி முன்னதாக நேரடி சவால் விடுத்தார்.
2018-ஆம் ஆண்டு அன்வாருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பில், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு தேர்தலில் போட்டியிடுவதற்கான 5-ஆண்டு தகுதி நீக்கக் காலத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதாக எந்த இடத்திலும் கூறப்படவில்லை; அதனடிப்படையில், அன்வாரை தகுதி நீக்கம் செய்யக் கோரி வேதமூர்த்தி வழக்குத் தொடர்ந்துள்ளார்.
2022 நவம்பர் 19-ஆம் தேதி தம்புன் எம்.பி.யாக அன்வார் தேர்ந்தெடுக்கப்பட்டதையும், 5 நாட்களுக்குப் பிறகு அவர் பிரதமராக நியமிக்கப்பட்டதையும் செல்லாது என உயர் நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என, 2018 முதல் 2020 வரை துன் Dr மகாதீர் மொஹமட் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றியவருமான வேதமூர்த்தி தனது வழக்கில் கூறியுள்ளார்.