சீன நிலக்கரி சுரங்க வெடிவிபத்து; 90 பேர் பலி; 9 பேரை தேடும் பணி தீவிரம்

பெய்ஜிங், மே-24,
வட சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வாயு வெடி விபத்தில், குறைந்தது 90 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது கடந்த 17 ஆண்டுகளில் அந்நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான சுரங்க விபத்தாகக் கருதப்படுகிறது.
Shanxi மாநிலத்தில் உள்ள Liushenyu நிலக்கரி சுரங்கத்தில், 247 தொழிலாளர்கள் நிலத்தடியில் பணியில் இருந்தபோது இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
அவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிர் தப்பியுள்ளனர்.
முதலில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைவாகவே அறிவிக்கப்பட்ட நிலையில், மீட்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதை அடுத்து பலி எண்ணிக்கை 90-ராக உயர்ந்துள்ளது.
மாயமான 9 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
கார்பன் மோனாக்சைடு வாயுவின் அளவு பாதுகாப்பான வரம்பைத் தாண்டியதே இந்த விபத்திற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கவும், விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்தவும் அதிபர் சீ சின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக சுரங்க நிறுவனத்தின் பொறுப்பாளர் ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.



