
பாயன் லெப்பாஸ், ஏப் 26 – சுபாங் Sultan Abdul Aziz விமான நிலையத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாடு ராடாரில் ஏற்பட்ட தொழிற்நுட்ப பிரச்னையால் பல்வேறு விமான பயணங்களில் தாமதம் ஏற்பட்டது. பினாங்கு அனைத்துலக விமான நிலையத்திலிருந்து சுபாங்கிற்கான FireFly நிறுவனத்தின் மூன்று விமானங்களைச் சேர்ந்த பயணிகளும் சிக்கிக் கொண்டவர்களில் அடங்குவர். இந்த விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்காக விமான நிலைய அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் பயணிகளுக்கு பகிர்ந்த அறிக்கையில் விமான நிறுவனங்கள் தெரிவித்துக் கொண்டன. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்காகவும் விமான நிறுவனங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டன. தாமதத்திற்கான முறையான காரணங்கள் தெரிவிக்கப்படாததால் தாங்கள் அதிருப்திக்கு உள்ளானதாக பல பயணிகள் தெரிவித்தனர்.