
கோலாலம்பூர், செப். 9 – கெலானா ஜெயா LRT பாதையில் தண்டவாள மாற்றுப் பணிகள் செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்குகின்றன. ஏழு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் இப்பணிகள் 2027 செப்டம்பர் வரை தொடரும் என Rapid KL அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக செப்டம்பர் 13, 20 மற்றும் 27ஆம் தேதிகளில் கோம்பாக் (Gombak), தாமான் மெலாத்தி (Taman Melati) நிலையங்களில் பணிகள் நடைபெறும். அந்த நாட்களில் இந்த இரு நிலையங்களும் வழக்கமான காலை 6 மணிக்குப் பதிலாக காலை 9.30 மணிக்கு செயல்படத் தொடங்கும்.
அடுத்தடுத்த கட்டங்களில் யுனிவர்சிட்டி (Universiti), கெரிஞ்சி (Kerinchi), அப்துல்லா ஹுக்கும் (Abdullah Hukum), டத்தோ கெராமாட் (Dato’ Keramat), ஜெலாத்தெக் (Jelatek), செத்தியாவங்சா (Setiawangsa), மஸ்ஜிட் ஜாமெக் (Masjid Jamek), KLCC உள்ளிட்ட நிலையங்களிலும் தண்டவாளங்கள் மாற்றப்படும்.
பணிகள் நடைபெறும் நாட்களில் பாதிக்கப்படும் நிலையங்களின் டிக்கெட் இயந்திரங்கள் காலை 9.30 மணி வரை மூடப்பட்டிருக்கும். எனினும், நிலைய கவுன்டரில் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். Rapid KL மற்றும் Touch ‘n Go பயனர்கள் வழக்கம்போல் பயணிக்கலாம்.
மேலும், பாதிக்கப்படும் நிலையங்களை இணைக்க இலவச பேருந்து சேவையும் வழங்கப்படும். மற்ற நிலையங்கள் வழக்கமான நேரத்தில் செயல்படும் நிலையில், பயணிகள் தங்கள் நிலையத்திற்கான பணித் தேதிகளை முன்கூட்டியே சரிபார்க்குமாறு Rapid KL அறிவுறுத்தியுள்ளது.



