Latestமலேசியா

ஜகார்த்தா RM45 மில்லியன் போதைப்பொருள் வழக்கு; மேலும் ஒரு மலேசிய விமானி கைது

பெட்டாலிங் ஜெயா, செப். 9 – ஜகார்த்தாவில் RM45 மில்லியன் மதிப்பிலான போதைப்பொருளுடன் மலேசிய ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் கைது செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒரு விமானியை புக்கிட் அமான் போலீசார் கைது செய்துள்ளனர்.

30 வயதுகளில் உள்ள அந்த மலேசிய விமானி, இரண்டு நாட்களுக்கு முன்பு கிள்ளான் பள்ளத்தாக்கில் கைது செய்யப்பட்டார். அவர் வேறொரு விமான நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ஹுசைன் ஓமார் கான் (Hussein Omar Khan) தெரிவித்தார்.

போதைப்பொருள் கும்பலுக்கும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட விமானிக்கும் இடையிலான பணப் பரிவர்த்தனையில் இரண்டாவது விமானிக்குத் தொடர்பு இருப்பதாக விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது. இதன்மூலம் இந்த வழக்கு தொடர்பில் மலேசியாவில் இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 29ஆம் தேதி ஜகார்த்தாவின் சோகர்னோ-ஹட்டா (Soekarno-Hatta) அனைத்துலக விமான நிலையத்தில் மலேசிய ஏர்லைன்ஸ் விமானி கைது செய்யப்பட்டார். அவரது உடைமைகளில் சுமார் 25 கிலோ எடையுள்ள 70,114 எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் 4 கிராம் ஷாபு கண்டுபிடிக்கப்பட்டதாக இந்தோனேசிய போலீசார் தெரிவித்தனர்.

RM45 மில்லியன் மதிப்புள்ள அந்த போதைப்பொருளை ஜகார்த்தாவுக்கு கொண்டு செல்ல RM50,000 வழங்குவதாக தனக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டதாக அந்த விமானி கூறியுள்ளார். இந்த வழக்கின் பின்னணியில் உள்ள போதைப்பொருள் கும்பல் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!