
கோலாலம்பூர், செப்டம்பர் 9 – சிலர் தங்களது கார்களை மாற்றியமைக்க 150,000 ரிங்கிட் வரை அதிக செலவு செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 6ஆம் தேதி கோலாலம்பூரில் நடத்தப்பட்ட ‘Ops Ekstrem’ சோதனையில், காரின் உயரத்தை மிகவும் குறைத்தல், காரின் உயரத்தை மாற்றக்கூடிய அனுமதியற்ற அமைப்பை பொருத்துதல் மற்றும் அதிக சத்தம் எழுப்பும் எக்ஸாஸ்ட் போன்ற மாற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த நடவடிக்கையில் 97 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, மொத்தம் 485 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. மேலும், விதிமீறல்களில் ஈடுபட்ட 37 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
JPJ தலைமை இயக்குநர் ஏடி ஃபட்லி ரம்லி (Aedy Fadly Ramli) கூறுகையில், வாகனத்தில் எந்தவொரு மாற்றமும் செய்வதற்கு முன்பு JPJ அனுமதி பெற வேண்டும். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அசல் நிலைக்கு மாற்றப்பட்ட பின்னரே விடுவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
‘Ops Ekstrem’ நடவடிக்கை இந்த வாரம் முதல் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும், அனுமதியற்ற கார் மாற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் JPJ தெரிவித்துள்ளது.



