Latestமலேசியா

சரவாக் FDS ஹெலிகாப்டர் விபத்து: அதே மாடல் ஹெலிகாப்டர்களின் சேவையை தற்காலிகமாக நிறுத்த லிங்கேஸ்வரன் வலியுறுத்து

கோலாலம்பூர், செப் 9 — சரவாக்கில் Flying Doctor Service (FDS) சேவையில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அதே மாடலைச் சேர்ந்த அனைத்து ஹெலிகாப்டர்களின் இயக்கத்தையும் விசாரணை முடியும் வரை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

விபத்துக்கான உண்மையான காரணம் கண்டறியப்பட்டு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படும் வரை இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் என அவர் குறிப்பிட்டார்.

FDS சேவையை நம்பியுள்ள மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதார அமைச்சின் பணியாளர்கள், விமானிகள் மட்டுமின்றி, சரவாக்கின் உட்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பும் முதன்மைப்படுத்தப்பட வேண்டும்.

இந்த சேவை அரசாங்க ஒப்பந்தத்தின் கீழ் தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டாலும், பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பில் இருந்து அரசாங்கம் விலக முடியாது. ஒப்பந்த நிறுவனங்கள் பயன்படுத்தும் விமானங்கள் உயர்ந்த பாதுகாப்பு மற்றும் விமானப் பறப்பு தரநிலைகளை பூர்த்தி செய்வதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்றார் லிங்கேஸ்வரன்.

விபத்தில் சிக்கிய BO-105 ஹெலிகாப்டர் 9M-LLF என்ற பதிவு எண்ணைக் கொண்டதாகும். அது புதிய விமானம் அல்ல என்றும், சுமார் 1991ஆம் ஆண்டு ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட பழைய விமானம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். BO-105 மாடலின் உற்பத்தி 2001ஆம் ஆண்டிலேயே நிறுத்தப்பட்டது.

எனினும், ஹெலிகாப்டரின் வயது அல்லது பராமரிப்பு நிலையே விபத்துக்குக் காரணம் என தற்போதைக்கு முடிவுக்கு வர முடியாது. விசாரணையில் அவை விபத்துடன் தொடர்புடையவை என தெரியவந்தால், சம்பந்தப்பட்ட தரப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என லிங்கேஸ்வரன் வலியுறுத்தினார்.

அதேவேளை, பழைய ஹெலிகாப்டர்களின் பயன்பாட்டை மறுபரிசீலனை செய்து, பாதுகாப்பான மற்றும் நவீன விமானங்கள் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டிய அவசியமும் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

“ஒப்பந்தச் செலவு அல்லது செயல்பாட்டு லாபத்தை விட மனித உயிர்களே முக்கியம். மற்றொரு துயரச் சம்பவம் நிகழும் வரை காத்திருக்கக் கூடாது,” என்றார் அவர்.

இதனிடையே, இந்த விபத்தில் உயிரிழந்த சுகாதார அமைச்சைச் சேர்ந்த நான்கு பேர் மற்றும் விமானியின் குடும்பத்தினருக்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!