Latestஉலகம்

சீனாவில் வீடுகளையும் சாலைகளையும் புதைத்த நிலச்சரிவு; 13 பேர் பலி, மூவரைத் தேடும் பணி தொடர்கிறது

பெய்ஜிங், செப்- 9 – சீனாவின் ஜியாங்சி (Jiangxi) மாகாணத்தில் சவ்டெல் (Saudel) புயலைத் தொடர்ந்து கொட்டித் தீர்த்த கனமழையால் அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மூவரின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை.

கடந்த சனிக்கிழமை சுய்சுவான் (Suichuan) மாவட்டத்தின் மிங்கெங் (Mingkeng) கிராமத்தை தாக்கிய நிலச்சரிவில் வீடுகளும் சாலைகளும் சேறு மற்றும் மண்ணுக்குள் புதைந்தன. அங்கு மட்டும் 12 பேர் உயிரிழந்த நிலையில், ஒருவரைத் தேடும் பணி தொடர்ந்து வருகிறது.

அருகிலுள்ள சுவோஆன் (Zuo’an) மற்றும் தாங்ஹு (Tanghu) பகுதிகளையும் நிலச்சரிவு விட்டுவைக்கவில்லை. அங்கு ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

மண்ணுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படும் நபர்களைக் கண்டுபிடிக்க 170-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். சேற்றால் சாலைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் சில இடங்களை அடைவதும் சவாலாகியுள்ளது.

கடந்த மாத இறுதியில் சீனாவின் கிழக்குக் கடற்கரையைத் தாக்கிய சவ்டெல் (Saudel) புயலுக்குப் பின்னர் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சில பகுதிகளில் போக்குவரத்து, பள்ளிகள் மற்றும் வேலை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!