
சிரம்பான், செப்டம்பர் 9 — சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியில் புதிதாகக் கட்டப்பட்ட திறந்தவெளி மண்டபத்தைத் தொடர்ந்து, தற்போது இருமாடி கேன்டீன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
சுமார் 700 மாணவர்கள் கல்வி பயிலும் இப்பள்ளியில், மாணவர்களின் இணைப்பாட நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக புதிய திறந்தவெளி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான வசதிகளுடன் கூடிய பெரிய கேன்டீன் தேவைப்பட்டதால், சுமார் RM1.2 மில்லியன் மதிப்பில் இருமாடி கேன்டீன் கட்டும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மொத்த செலவில் RM600,000 தொகையை JF நட்சத்திரக் குழுமம் ஏற்றுக்கொண்டுள்ளது. மீதமுள்ள RM600,000 தொகையை பள்ளி வாரியமும் நிர்வாகமும் திரட்டி வரும் நிலையில், இதுவரை சுமார் RM200,000 நிதி சேகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிரம்பான் நாடாளுமன்ற உறுப்பினரும் போக்குவரத்து அமைச்சருமான அந்தோனி லோக்கின் முயற்சியால், லீ அறவாரியம் சார்பில் மேலும் RM200,000 நிதியுதவி கிடைத்துள்ளதாக அருள் குமார் தெரிவித்தார்.
அதற்கான காசோலை இன்று பள்ளி வாரியக் குழுத் தலைவர் காலிதாசனிடம் வழங்கப்பட்டது.
இந்த நிதியுதவி, இருமாடி கேன்டீன் கட்டுமானப் பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு முக்கிய பங்களிப்பாக அமையும் என அருள் குமார் கூறினார்.
இதனிடையே, பள்ளியின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்வி மற்றும் இணைப்பாட நடவடிக்கைகளுக்கும் தொடர்ந்து ஆதரவளித்து வரும் லீ அறவாரியத்திற்கும், நிதி கிடைக்க முயற்சி மேற்கொண்ட அமைச்சர் அந்தோனி லோக்கிற்கும் அருள் குமார் நன்றி தெரிவித்துக் கொண்டார்.



