Latestமலேசியா

ஜோகூரில் வளர்ப்புப் பாட்டியால் தாக்கப்பட்டு 16 மாதக் குழந்தை பரிதாப மரணம்

ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.11-ஜோகூரில் பிறந்தது முதல் தாம் பராமரித்து வந்த 16 மாத பெண் குழந்தையை மாற்றாந்தாய் பாட்டி தாக்கியதாக நம்பப்படும் சம்பவத்தில், அக்குழந்தை உயிரிழந்தது.

திருமணத்திற்குப் புறம்பாகப் பிறந்த அக்குழந்தையை, ஜோகூரில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்துக் கொண்டிருந்த 18 வயதுடைய இளம் தாய், அம்மாதுவிடம் விட்டுச் சென்றிருந்தார்.

பிறந்ததிலிருந்தே அக்குழந்தை அப்பெண்மணியுடனும் அவரது கணவருடனும் வசித்து வந்ததாக ஜோகூர் காவல் துறைத் தலைவர் Datuk Ab Rahaman Arsad தெரிவித்தார்.

அம்மாது குழந்தையைத் தாக்கியதும், கைகள் மற்றும் கால்களால் அடித்ததுடன் அதன் மீது ஏறி மிதித்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் கூறினார்.

Taman Sri Saujanaவில் தங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை அசைவற்ற நிலையில் கண்டதாகக் கூறி, ஜூலை 31 ஆம் தேதி அம்மாது காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

மருத்துவக் குழுவினர் அக்குழந்தைக்கு CPR சிகிச்சை அளித்தனர். இருப்பினும், அக்குழந்தை இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

கவனக்குறைவால் மரணம் விளைவித்ததாகக் கூறி, 2001-ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் தொடக்கத்தில் விசாரிக்கப்பட்டது.

எனினும், Pasir Gudang மருத்துவமனையில் தடயவியல் மருத்துவ நிபுணர் மேற்கொண்ட சவப் பரிசோதனையில், வயிற்றுப் பகுதி மற்றும் மார்புப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான தாக்கத்தால் அக்குழந்தை உயிரிழந்தது தெரிய வந்தது. அக்குழந்தையின் உடலில் காயங்கள் மற்றும் சிராய்ப்புகளும் காணப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அதை அடுத்து, கொலைக் குற்றமாகப் பதிவு செய்து அக்குழந்தையின் அந்த வளர்ப்புப் பாட்டியையும் அவரது கணவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். சந்தேக நபர்கள் நாளை வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வளர்ப்புப் பாட்டியின் மீது நாளை குற்றம் சாட்டப்படலாம். அவரது கணவரையும் அக்குழந்தையின் தாயாரையும் பிணையில் விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அரசுத் தரப்பு சாட்சிகளாக விசாரணையில் சேர்க்கப்படுவார்கள் எனவும் Ab Rahaman குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!