ஜோகூர், செப்டம்பர் 23 – இன்று ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தேசியத் தினக் கொண்டாட்டத்தின் நிறைவு விழா மிகவும் கோலாகலமாக நடந்தேறியது.
ஒரு மாதக் காலமாக நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கென பல போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
வர்ணம் தீட்டும் போட்டி, புதிர்ப்போட்டி, நாட்டுச் சின்னங்களை உருவமைக்கும் போட்டி, சுதந்திர தினப் பாடல் பாடும் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, இன்று வெற்றியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, மாணவர்களின் கைவண்ணத்தில் உருவான நாட்டின் புகழ்பெற்ற சின்னங்களின் கண்காட்சியும், இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடக்கம் கண்டதாக, அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத்தலைவர் பிரகாஷ் தெரிவித்தார்.
இன்றைய நிகழ்ச்சியைச் சிறப்பிக்கும் வகையில், ஜோகூர், இஸ்காண்டார் புத்திரி மாவட்டத்தின் தலைமை காவல்துறை அதிகாரி எ.சி.பி.குமரேசன் முனியாண்டி, அவர்தம் சக பணியாளர்கள் மற்றும் பள்ளியின் தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.