Latestமலேசியா

ஜோகூர் PKR மாநாட்டில் பரபரப்பு; ரமணன் பேசும் போதும் வெளிப்படையாக இடைமறித்த ஹசான் கரிம்

ஜோகூர் பாரு, ஏப்ரல்-6-நேற்று நடைபெற்ற ஜோகூர் பி.கே.ஆர் மாநாடு திடீரென பரபரப்பாக மாறியது.

மேடையில் உரையாற்றிய கட்சியின் உதவித் தலைவரான டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனை, மூத்தத் தலைவர் ஹசான் கரிம் இடைமறித்ததால் இருவருக்கும் இடையே வெளிப்படையாக கடும் வாய்த்தகராறு ஏற்பட்டது.

கட்சித் தலைவரும் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உள்ளிட்ட பிரமுகர்கள் முன்வரிசையில் அமர்ந்திருக்க, இந்த விவாதம் திடீரென தீவிரமடைந்ததால், நிகழ்ச்சியின் நேரலை ஒளிபரப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது.

மேலும், அங்கிருந்த செய்தியாளர்களும் அரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

நேரலை நிறுத்தப்பட்ட பிறகும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்தது, மாநாட்டுப் பேராளர்கள் கைப்பேசியில் பதிவு செய்து வைரலான வீடியோக்களில் தெரிகிறது.

அதில், முன்னாள் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லியை சாடும் விதமாக ரணமன் பேசியதாகவும், தனிமனிதத் தாக்குதல் முறையல்ல எனவும் ஹசான் கூறினார்.

ஆனால், ரமணனோ தாம் யாரையும் தாக்கவில்லை என்றும் கட்சித் தலைமைக்கும் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கும் அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும் என்றே வலியுறுத்துவதாகவும் பதில் சொன்னார்.

அதே சமயத்தில் இது தமக்கான பேசும் நேரம் என்பதால் தம்மை பேசவிடுமாறும் ரமணன் விளக்கினார்.

“மாநாட்டுக்கு வராத ஒருவர் மீது குற்றம் சொல்வது, அவருக்கு நியாயமாக இருக்காது; அவரால் தன்னைத் தற்காக்க முடியாது”, என ஹசான் கூற மாநாடு பரபரப்பானது.

அண்மையக் காலமாக கட்சியின் முன்னாள் துணைத்தலைவரும் பொருளாதார அமைச்சருமான ரஃபிசி ரம்லி அன்வாரையும் பிகேஆர் கட்சியின் செயல்பாட்டையும் தாக்கி விமர்சித்து வருவதால் அவர் கட்சியை விட்டு நீக்கப்பட வேண்டும் அல்லது அவரே வெளியேற வேண்டும் எனும் குரல்கள் வலுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

இந்த சலசலப்பு குறித்து இதுவரை கட்சி சார்பில் அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!