கோலாலம்பூர், ஜூலை 5 – பினாங்கின் முன்னாள் துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் ராமசாமியின் உரிமை கட்சியின் பதிவுக்கான விண்ணப்பத்தை சங்கங்களின் பதிவு இலாகா நிராகரித்தது. இது தொடர்பாக 30 நாட்களுக்குள் உள்துறை அமைச்சர் சைபுடின் நசுட்டியோன் இஸ்மாயிலிடம் முறையீடு செய்வதற்கு கட்சியின் சட்டக் குழு முன்னெடுத்து வருவதாக உரிமைக் குழுவின் இடைக்கால தலைமைத்துவத்தின் தலைவருமான ராமசாமி தெரிவித்தார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அரசாங்கம் தமது கட்சிக்கு எதிரான பழிவாங்கும் போக்கை கொண்டிருப்பதால் சங்கங்களின் பதிவு இலாகாவின் முடிவு தமக்கு வியப்பை அளிக்கவில்லையென ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். கடந்த ஆண்டு நவம்பவர் 3ஆம் தேதி செய்திருந்த உரிமை கட்சியின் விண்ணப்பத்திற்கு 8 மாதத்திற்குப் பிறகு ஜூலை 6ஆம் தேதி சுங்கை பக்காப் இடைத் தேர்தல் நடைபெறும் வேளையில் கட்சி பதிவை நிராகரிக்கும் முடிவை சங்கங்களின் பதிவகம் ஜூலை 4 ஆம் தேதி அறிவித்திருக்கிறது என அவர் தெரிவித்தார்.
பக்காத்தான் ஹரப்பான் தலைமையிலான அரசாங்க கூட்டணியை அண்மையில் நடைபெற்ற கோலா குபு பாரு இடைத் தேர்தலிலும் நாளை நடைபெறவிருக்கும் சுங்கை பக்காப் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலிலும் எங்கள் கட்சித் தலைவர்கள் ஆதரிக்கவில்லை என்பதால் அரசாங்கத்தின் ஆத்திரத்தின் வெளிப்பாடாக உரிமை கட்சியின் பதிவை நிராகரிக்கும் முடிவாக இருக்கலாம். இந்நாட்டு பிரஜைகளின் அடிப்படை உரிமைக்கான சுதந்திரத்தை மதிக்க மறுத்துள்ள மடானி அரசாங்கத்தின் முடிவு குறித்து நாங்கள் வியப்படையவில்லை. அரசியலமைப்பு சட்டத்தின் 10 (1) (C) பிரிவின்படி உரிமை கட்சியை அமைப்பது எங்களின் அடிப்படை உரிமை என்பதால் எங்களது கட்சியின் போராட்டம் இனிமேல் மேலும் முனைப்பாக முன்னெடுக்கப்படும் என டாக்டர் ராமசாமி தெரிவித்தார்.