காஜாங், நவம்பர்-5 – சிலாங்கூர், காஜாங், 9-வது மைல் சாலை அருகேயுள்ள டோல் சாவடியில் அடாவடியாக நடந்துகொண்டு, டோல் வசூலிப்பு முகப்பின் சுவரை காலால் எட்டி உதைத்த இளைஞன் கைதாகியுள்ளான்.
டோல் கட்டண வசூலிப்பாளரான 22 வயது பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி போலீஸ் அவனைக் கைதுச் செய்தது.
டோல் கட்டணம் செலுத்தும் போது Touch n Go அட்டையை , அதற்கான பலகையில் பலமாக தட்டியதால், அப்பெண் அந்நபரை கடிந்து கொண்டார்.
இதனால் சினமடைந்து, டோல் கட்டண முகப்புக்குச் சென்று அப்பெண்ணைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கட்டண முகப்பின் சுவரை அவன் காலால் எட்டி உதைத்த வீடியோ முன்னதாக வைரலானது குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபர் போதைப் பொருள் உட்கொண்டிருந்ததும், ஏற்கனவே 17 குற்றப்பதிவுகளைக் கொண்டிருந்ததும் போலீஸ் விசாரணையில் உறுதியானது.
சதிநாச வேலை மற்றும் அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் கீழும் அவன் விசாரிக்கப்படுகிறான்.