தங்காக்கில் எண்ணெய் நிலையத்தில் அமளியில் ஈடுபட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர்

தங்காக், ஜூலை-24-ஜோகூர், தங்காக்கில் எண்ணெய் நிலையம் ஒன்றில் பொது மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் அமளியில் ஈடுபட்ட ஆடவர், உண்மையில் நீண்ட காலமாகவே மனநலம் பாதிக்கப்பட்டவர் என போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
31 வயது அவ்வாடவர், தங்காக் மருத்துவமனை வழங்கிய மருந்து மாத்திரைகளை கடந்த சில நாட்களாக எடுத்துகொள்ளாமல் விட்டது, விசாரணையில் அம்பலமானது.
ஏற்கனவே மூவார் சுல்தானா ஃபாத்திமா நிபுணத்துவ மருத்துவமனயில் அந்நபர் மனநல சிகிச்சைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் சம்பவ வீடியோ வைரலானதை அடுத்து, அவரின் குடும்பத்தாரும் போலீஸில் புகார் செய்துள்ளனர்.
முன்னதாக சமூக ஊடகங்களில் பரவிய 33 வினாடி வீடியோவில், துப்புரவுத் தொழிலாளிகள் அணியும் உடையணிந்திருந்த ஓர் ஆடவர், எண்ணெய் நிலையத்தில் அங்கும் இங்கும் ஓடுவதும், குப்பைத் தொட்டி மற்றும் எண்ணெய் பம்ப் இயந்திரத்தில் மோதுவதும் தெரிந்தது.



