ஜோர்ஜ்டவுன், அக்டோபர்-2, பினாங்கில் ‘along’ எனப்படும் வட்டி முதலைகளின் வைப்பைட்டியாக வைக்கப்பட்டதாக டிக் டோக்கில் வெளியான பாட்காஸ்ட் நேர்காணல் ஒளிநாடா வெறும் கட்டுக்கதையே.
மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அஹ்மாட் அதனை உறுதிப்படுத்தினார்.
26 வயது அப்பெண் நேற்று முன்தினம் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
இரவு 10.50 மணிக்கு அப்பெண்ணிருக்குமிடத்தை கண்டுபிடித்த பினாங்குக் குற்றப்புலனாய்வுத் துறை, சற்று நேரத்திலேயே செபராங் பிறை உத்தாராவில் உள்ள ஒரு வீட்டிலிருந்து அவரை மீட்டது.
செப்டம்பர் 26-ஆம் தேதி டிக் டோக் ஒளிநாடா நேரலையில் பேசிய அப்பெண், along கும்பலால் சிவப்பு விளக்குப் பகுதியில் சம்பளமில்லாமல் வேலை வாங்கப்பட்டதாகக் கூறியிருக்கிறார்.
வட்டிக்கு கடன் வழங்கும் நிறுவனங்களிடமும் கடன் வாங்கியதாகவும், அதனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் அந்நிறுவனங்களால் மிரட்டல்களுக்கு ஆளானதாகவும் அவர் சொன்னார்.
தந்தை வட்டிக்கு வாங்கிய 20,000 ரிங்கிட் பணத்தைச் செலுத்த முடியாத காரணத்தால், கடந்த பிப்ரவரி முதல் வட்டி முதலையின் வைப்பாட்டியாக சம்பளமில்லாமல் வேலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டதாக அவர் கூறிக்கொண்டார்.
அச்சம்பவம் குற்றவியல் சட்டத்தோடு, தொடர்பு-பல்லூடக ஆணையச் சட்டத்தன் கீழும் விசாரிக்கப்படுகிறது.
கிராமத்திலுள்ள தனது தாய்க்கும் மிரட்டல் போனதாக அவர் கூறினார்.
எனினும் விசாரணையில் அவை உண்மையில்லை என கண்டறியப்பட்டது.
உள்ளக்கிடங்கை கொட்டுவதற்காக அவர் கற்பனையாக உருவாக்கிய கதை என்பது அம்பலமானது.