Latestமலேசியா

தனது வங்கிக் கணக்கில் 2.4 மில்லியன் ரிங்கிட் பரிவர்த்தனையைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆடவர்

கோலாலம்பூர், ஜூலை-03-வேலை தேடும் முயற்சி இளைஞர் ஒருவருக்கு மோசமான கனவாக மாறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சம்பளம் வழங்குவதற்காகத் தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட ஒரு வங்கிக் கணக்கை மோசடிக் கும்பல் ஒன்று சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்களுக்குப் பயன்படுத்தியது தம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாக 26 வயதான ஜே எனும் இளைஞர் கூறியுள்ளார்.

அதோடு அவ்வங்கிக் கணக்கில் 2.4 மில்லியன் ரிங்கிட் பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்த நிலையில், அறியாமலேயே தாம் “பணக் கடத்திக் கருவியாக” மாற்றப்பட்டது பின்னர்தான் தெரிய வந்ததாக அவர் விளக்கினார்.

தமக்குத் தெரியாமலேயே தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் வங்கிக் கணக்கை, அக்கும்பல் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியதை அறிந்த ஜே தற்போது அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்.

வாடிக்கையாளர் சேவை அதிகாரியாகப் பணியைத் தொடங்கவிருந்த ஜே, ஒரு வார காலப் பயிற்சிக்குப் பிறகு அந்நிறுவனத்திடமிருந்து எந்தத் தகவலும் பெறாததை அடுத்து அவ்விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

தொடக்கத்தில் ஒரு வாரம் நிறுவனமொன்றில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டதாகவும் சம்பளம் வழங்குவதற்காக ஒரு வங்கிக் கணக்கைத் திறக்குமாறு தம்மிடம் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் ஜே கூறினார்.

மூன்று வங்கிகள் கணக்குத் தொடங்குவதற்கான விண்ணப்பங்களை நிராகரித்த நிலையில், தனக்குச் சந்தேகம் ஏற்பட்டு பயிற்சியிலிருந்து விலக விரும்பிய நிலையில், நிறுவனத்தின் பிரதிநிதி அதைத் தடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பின் அந்தப் பயிற்சியைத் தாமும் மற்ற சிலரும் முடித்து விட்டு, வேலையைத் தொடங்குவதற்கான அழைப்புக்காகக் காத்திருந்ததாக போது அனைவரும் மாயமாகிவிட்டனர்.

சம்பந்தப்பட்ட நபரைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியின் போது தமது பெயரில் ஒரு நிறுவனத்தைப் பதிவு செய்து அதன் உரிமையாளராகக் காட்டியிருப்பது தெரிய வந்ததாகவும் ஜே விளக்கினார்.

மேலும், இரண்டு இணையச் சேவை கணக்குகளைப் பதிவு செய்யவும் தமது பெயர் பயன்படுத்தப்பட்டிருப்பது, நேரில் சென்றதே இல்லாத வங்கிகளில், தமது பெயரில் பல வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டிருந்தது, தமது எண்ணைப் பயன்படுத்தி சிலரை ஏமாற்றியிருந்தது என இன்னும் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்ததாக ஜே மேலும் கூறினார்.

இதனிடையே அம்மோசடி குறித்து விரைவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உதவிருப்பதாக மலேசிய அனைத்துலக மனிதாபிமான அமைப்பின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!