கோலாலம்பூர், ஜுன் 19 – ஆங்கில மொழியில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கூடுதலாக மிளிர வேண்டும் என்ற அடிப்படையில் சரஸ்வதி ஆங்கில சாவல் மொழி போட்டியை இரண்டாம் ஆண்டாக ஏற்பாடு செய்திருந்தது பேசிஸ் பே நிறுவனம்.
தேசிய தலைமையாசிரியர் மன்றம், வர்த்தக சம்மேளனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரின் ஆதரவோடு இப்போட்டியின் மாபெரும் இறுதிச் சுற்று கடந்த மே 26ஆம் திகதி மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.
நாடு தழுவிய நிலையில் 11 மாநிலங்களை பிரதிநித்து தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து சிறப்பித்த இப்போட்டி மொத்தம் 4 சுற்றுகளாக நடத்தப்பட்டது என இப்போட்டியின் ஆலோசகர் செல்வமலர் செல்வராஜூ தெரிவித்தார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆங்கில மொழியில் சாளைத்தவர்கள் அல்ல என்பதை இப்போட்டியின் அடைவு நிலை படம்பிடித்துக் காட்டுகிறது.
இப்போட்டியின் மாபெரும் வெற்றியாளராக சிலாங்கூர் செர்டாங் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஜோசுவா அபிவாணன் வாகை சூடிய வேளை, இரண்டாம் மூன்றாம் இடத்தை முறையே பேராக், மாலிம் நாவார் தமிழ்ப்பள்ளியின் ஹனுஸ்காபிரியா தேவேந்திராவும், பூச்சோங் கின்றாரா தமிழ்ப்பள்ளியின் காவியா கோகுலநாத் ஆகியோர் தட்டிச் சென்றனர்.
சிறு வயது முதலே ஆங்கிலப் புலமையின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில் பொதுப் பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்ள உதவுவதாக வெற்றியாளர்கள் வணக்கம் மலேசியாவிடம் அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் மிகவும் முக்கியமான ஆங்கில மொழியை இளமையிலேயே ஆளுமை பெற வேண்டும் என்ற பெரும் முயற்சியில் பேசிஸ் பே நிறுவனத்தின் சரஸ்வதி ஆங்கில சாவல் போட்டி களம் இறங்கி அதிலும் வெற்றியையும் அடைந்துள்ளது எனலாம்.
இதனிடையே மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் சமூகத்திற்கும் பல புதிய திட்டங்களையும் எதிர்காலத்தில் முன்னெடுக்குமத திட்டங்களையும் பேசிஸ் பே நிறுவனம் கொண்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதல் சரஸ்வதி ஆங்கில சாவல் போட்டியில் 250 தமிழ்ப்பள்ளிகளிலிருந்து 1200 பேர் பங்கேற்றனர்.
ஆனால் அந்நிலை மாறி இவ்வாண்டு இரண்டு மடங்காக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது அதன் வெற்றியை பறைசாற்றுகிறது.
இது போன்ற ஆங்கிலப் போட்டிகள் மாணவர்களின் திறனை பட்டை திட்டுவதுடன் அவர்களுக்கு தன்னம்பிக்கையும் அளிக்கிறது என்றால் அது மிகையாகாது.