
ஈப்போ, அக்டோபர்-28, நாடு முழுவதுமுள்ள இந்திய கிராமங்கள் தற்போது KPKT எனப்படும் வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளன.
47 இந்திய நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் அண்மையில் நடத்திய சந்திப்புக்குப் பிறகு, அமைச்சரவை அம்முடிவை எடுத்துள்ளது.
மலாய் பாரம்பரிய கிராமங்கள், புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சின் கீழ் வருவதைப் போல், சீனப் புது கிராமங்களும் இந்திய கிராமங்களும் KPKT-யின் கீழ் வருவதாக, அதன் அமைச்சர் ஙா கோர் மிங் (Nga Kor Ming) தெரிவித்தார்.
இதுநாள் வரை இந்திய கிராமங்கள் எந்த அமைச்சின் கீழும் வைக்கப்படவில்லை.
ஆனால் எந்தவொரு தரப்பும் அரசாங்கத்தின் அனுகூலங்களைப் பெறுவதிலிருந்து விடுபடக் கூடாது என்ற நோக்கத்தில் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக கோர் மிங் சொன்னார்.
இவ்வேளையில் இந்திய கிராமங்களில் சாலைகள், வடிகால்கள், கால்வாய்கள், சமூக மண்டபங்கள், மடானி பொது பூங்காங்கள் போன்றவற்றை அமைக்க 10 மில்லியன் ரிங்கிட் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்திய கிராமங்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய, JKKK எனப்படும் கிராம மேம்பாடு மற்றும் பாதுகாப்புச் செயற்குழுக்களும் அமைக்கப்படும் என அமைச்சர் கூறினார்.