கோலாலம்பூர், ஏப்ரல் 4 – இடைநிலைப்பள்ளிகளில் தற்போது எஸ்.பி.எம் தேர்வுக்கான பதிவுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்னும் சில இடைநிலைப்பள்ளி முதல்வர்கள் தமிழ் இலக்கியப் பாடத்தை விருப்பப் பாடமாக, எஸ்.பி.எம் தேர்வில் எடுப்பதற்குத் தடை விதிக்கும் சூழலை பெற்றோர் பலர் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளனர்.
பல போராட்டத்திற்கு பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டில்தான், தமிழ் இலக்கியத்திற்கும் சீன இலக்கியப் பாடத்திற்கும் முறையான கலைத்திட்டம் உருவாகப்பட்டு, பாடப் புத்தகங்களும் கல்வி அமைச்சால் வழங்கப்பட்டதாகக் கல்விசார் அமைப்பு சேர்ந்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
அப்போது அதிகாரப் பூர்வ சுற்றறிக்கையின் வாயிலாக எல்லா மாநிலக் கல்வி இலாகா மற்றும் இடைநிலைப்பள்ளி முதல்வர்களுக்கும், இப்பாடங்களை பள்ளியில் வகுப்பறையில் கற்பிக்க அனுமதி வழங்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், ஆசிரியர் இல்லாத நிலையிலும் மாணவர்கள் தனிநபராக இலக்கிய பாடத்தைத் தேர்வுக்காகப் பதிந்து SPM சான்றிதழில் சேர்த்துக் கொள்ளவும் முடியும் என்று அன்றே அச்சுற்றறிக்கையின் வழி தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், இந்த ஆண்டு மீண்டும் 3 மாநிலங்களிலிருந்து மொத்தமாக பல்வேறு காரணங்களை முன்வைத்து ஏழு இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் இலக்கியப் பாடத்திற்கு முட்டுக் கட்டை விதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
எனவே, இச்சிக்கலுக்கான தீர்வுகளை காண மலேசியத் தமிழ் பள்ளி கல்வி மேம்பாட்டு சங்கம் பெரும் முயற்சியில் களமிறங்கி உள்ளதாக அதன் தலைவர் வெற்றிவேலன் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் முன்வந்து இச்சிக்கலை ஆதாரத்தோடு தெரியப்படித்தினால் கண்டிப்பாக உதவும் முடியும் என்றார் அவர்.