
தாசேக் கெளுகோர், அக்டோபர்-20,பினாங்கு, தாசேக் கெளுகோரில், 10 மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 25 வயது குழந்தைப் பராமரிப்பாளர் ஒருவரைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
திங்கள்கிழமை அதிகாலை, குழந்தையின் தாய் குழந்தையைப் பராமரிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்நிலையில் காலை சுமார் 9.50 மணியளவில், குழந்தை சோர்வாகவும் உடல்நலக் குறைவுடனும் இருப்பதைக் கவனித்த பராமரிப்பாளர், உடனடியாக அருகிலுள்ள கிளினிக்கிற்குக் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
ஆனால், குழந்தை அங்கு செல்வதற்கு முன்பே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கக் கட்ட உடல் பரிசோதனையில், குழந்தையின் உடலில் வெளிக் காயங்களோ, சிராய்ப்புகளோ காணப்படவில்லை.
இந்நிலையில், குழந்தையின் மரணத்திற்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய, சவப் பரிசோதனை அறிக்கைக்காக போலீஸார் காத்திருக்கின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, 2001-ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



