
தானா மேரா, அக்டோபர்-18 – கிளந்தான், தானா மேராவில் போதைப்பொருள் சந்தேக நபரைத் துரத்திச் சென்ற போலீஸ் கார்ப்பரல் ஒருவர், பாராங் கத்தியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.
கம்போங் Lalang Pepuyu-வில் நேற்று பிற்பகல் 1.35 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
போதைப்பொருள் ஒழிப்புச் சோதனையின் போது, 30 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் பாராங் கத்தியுடன் தப்பியோட முயன்றுள்ளார்.
அப்போது தன்னைத் துரத்திய போலீஸாரை நோக்கி சந்தேக நபர் பாராங்கை வீசியதில், 37 வயது கார்ப்பரலின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
காயமடைந்த அவர் தானா மேரா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக கிளந்தான் போலீஸ் தலைவர் டத்தோ Mohd Yusoff Mamat தெரிவித்தார்.
சந்தேக நபர் ஒருவழியாகக் கைதுச் செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்து பாராங், யாபா போதை மாத்திரை மற்றும் கெத்தும் போதை பானம் பறிமுதல் செய்யப்பட்டன.
அவ்வாடவருக்கு ஏற்கனவே 6 போதைப்பொருள் குற்றப் பதிவுகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.



