
ஜோகூர் பாரு, அக்டோபர்-18 – ஜோகூரில் நிலவும் கடுமையான புகைமூட்டம் காரணமாக, அனைத்து பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்களின் மூடல் மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை அக்டோபர் 19-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு தொடர்ந்து கவலைக்குரிய நிலையில் இருப்பதால், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, கல்வி மற்றும் தகவல் துறைகளுக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் Dr Muhammad Naqib Md Ghazali தெரிவித்தார்.
பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் காலத்தில், மாணவர்களுக்கு வீட்டிலிருந்தபடியே இணையவழிக் கற்றல் தொடரும்.
எனினும், முக்கியத் தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு, கடுமையான சுகாதார விதிமுறைகளுடன் சிறப்பு அனுமதி வழங்கப்படலாம்.
தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள், சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு செயல்படுவது குறித்து தாங்களே முடிவெடுக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ஜோகூரில் ஆஸ்மா மற்றும் மேல் சுவாசப் பாதை நோய்த்தொற்று தொடர்பாக 30,648 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இது வாராந்திர அடிப்படையில் 20.7 விழுக்காடு அதிகரிப்பாகும்.



