
ஷா ஆலாம், ஏப்ரல்-21- சிலாங்கூர், ஷா ஆலாம், தாமான் ஸ்ரீ மூடா திடீர் வெள்ளப் பிரச்னைத் தொடர்பில் தாங்கள் நடத்திய அமைதி மறியல் தோல்வியில் முடிந்திருப்பதாகக் கூறப்படுவது உண்மையல்ல.
இன்று ஷா ஆலாமில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அப்பகுதி வாழ் மக்களில் ஒருவரான உமாகாந்தன் அதனைத் தெளிவுப்படுத்தினார்.
சிலாங்கூர் மந்திரி பெசாரின் அறிக்கை நேற்று வெளியானதும், இன்று காலை மாநில அரசின் பல்வேறு இலாகாக்களைச் சேர்ந்த அதிகாரிகள் வந்து ஆய்வு நடத்தியதுமே, அப்போராட்டத்தின் வெற்றிக்கான சான்று என்றார் அவர்.
இன்று வந்திருந்த அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்தோம்; இந்நிலையில் 16 நாட்களில் மக்கள் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சிய என்றாலும், வெள்ளப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வே தங்களின் கோரிக்கையாகும்; அது கிடைக்கும் வரை போராடுவோம் என அவர் கூறினார்.
பூச்சோங், புத்ரா ஹைட்ஸ் எரிவாயுக் குழாய் வெடிப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிதியுதவிகள் போன்று, தாமான் ஸ்ரீ மூடா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாகும்.
இந்த திடீரெ வெள்ளப் பிரச்னை ஏன் நடக்கிறது, வெள்ளத் தடுப்புத் திட்டம் போன்றவை குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டுமென, வழக்கறிஞர் தினேஷ் வலியுறுத்தினார்.
இவ்வேளையில், நேற்றைய அமைதி மறியல் முடிந்த கையோடு பேராக், ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதிக்கு சிலாங்கூர் மந்திரி பேசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியை சந்திக்கச் சென்றோம்; ஆனால் அவரை சந்தித்து மகஜர் கொடுக்க முடியாமல் போனதாக உமாகாந்தன் கூறினார்.
இதனிடையே, இது மக்களுக்கான போராட்டம்; அரசியல் தூண்டுதல் எதுவும் இல்லை; எங்களின் பின்னால் யாருமில்லை. மக்கள் பிரச்னைக்காக முன்னெடுத்த இந்த போராட்டத்திற்கு, மந்திரி பெசாரின் செயலாளர் உட்பட சிலர் இனவாத சாயம் பூசுகின்றனர்.
இது இனம் சார்ந்த பிரச்னையல்ல, மக்கள் சார்ந்த பிரச்னை என மீண்டும் தெளிவுப்படுத்த விரும்புவதாக அவர்கள் தெளிவுப்படுத்தினர்.