
தாவாவ், அக்டோபர்-9,சபா, தாவாவில் உள்ள விளையாட்டுத் திடல் ஒன்றில், ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 13 இடைநிலைப் பள்ளி மாணவர்கள் உட்பட 14 பேரைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ காட்சிகளின் அடிப்படையில், 12 முதல் 14 வயதுக்குட்பட்ட இந்தச் சிறுவர்கள் கைதாகியுள்ளனர்.
இரு மாணவர்களிடையே ஏற்பட்ட தவறான புரிதலே பின்னர் கும்பல் மோதலாக மாறியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் தாவாவ் மாவட்டப் போலீஸ் தலைவர் ரோஸ்டி மாட் ஜூசோ தெரிவித்தார்.
கைதானவர்களில் 13 பேர் பள்ளி மாணவர்கள் என்றும், மற்றொரு 14 வயதுச் சிறுவன் அடையாள ஆவணங்கள் இல்லாதவர் எனவும் கூறப்பட்டுள்ளது.
அனைவரும் பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில், கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஆவணங்கள் இல்லாத சிறுவன் மீது குடிநுழைவுச் சட்டத்தின் கீழும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



