Latestமலேசியா

மலேசியாவில் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை உணவு நச்சுத்தன்மையால் 5 பேர் உயிரிழப்பு; சுமார் 13,000 பேர் பாதிப்பு

கோலாலம்பூர், அக்டோபர்-9,நாட்டில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான 8 மாதங்களில், நச்சுணவால் 12,899 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், ஐவர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்லி அஹ்மாட், மக்களவையில் இத்தகவலை வெளியிட்டார்.

உணவுப் பாதுகாப்பு விதிமீறல்களுக்கு விதிக்கப்படும் தற்போதைய தண்டனைகள் மிகவும் குறைவாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

உதாரணமாக, பேராக், தெலுக் இந்தான் அறிவியல் இடைநிலைப் பள்ளியில், _salmonella_ கிருமியால் மாசடைந்த முட்டை உணவைச் சாப்பிட்ட 6 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்ட நபருக்கு வெறும் மூவாயிரம் ரிங்கிட் அபராதமே விதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அதேபோன்று, 2018-ஆம் ஆண்டு கெடாவில் லக்சா உணவை உட்கொண்ட 61 பேர் பாதிக்கப்பட்டு, இருவர் உயிரிழந்த சம்பவத்தில், 1,500 ரிங்கிட் மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

எனவே தான், தண்டனைகளை அதிகரிக்கும் நோக்கில், கடந்த 43 ஆண்டுகளாகத் திருத்தப்படாத உணவுச் சட்டத்தை திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

கடுமையான விதிமீறல்களில் ஈடுபடும் உணவகங்களை உடனடியாக மூடவும், மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தவும், புதியச் சட்ட மசோதாவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்தும் அந்த 2026 உணவுச் சட்டத் திருத்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!