
கோலாலாம்பூர், ஜூன்-25,
உத்தேச ‘தேசிய நல்லிணக்க ஆணையம்’ இன்னும் ஆரம்பக்கட்ட ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டங்களின் மட்டத்திலேயே உள்ளது.
இது குறித்து அரசாங்கம் இதுவரை எந்தவோர் இறுதி முடிவும் எடுக்கவில்லை என தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
மக்களவையில் பெசூட் உறுப்பினர் டத்தோ Che Mohamad Zulkifly Jusoh எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த அமைச்சு அவ்வாறு கூறியது.
சமூக ஊடகங்களில் அதிகரித்து வரும் சர்ச்சைகள் மற்றும் 3R எனப்படும் மதம், இனம், ஆட்சியாளர்கள் மீதான நிந்தனை விவகாரங்களைக் கையாள்வதற்கு ஒரு பயனுள்ள வழிமுறையை உருவாக்க பொது சமூக அமைப்புகள் மற்றும் நிபுணர்களின் பரிந்துரையின் பேரில் இந்த தொடக்கக் கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அது குறிப்பிட்டது.
இந்த புதிய ஆணையத்தின் உருவாக்கம் குறித்து எந்தவோர் ஆலோசனை நடத்தப்பட்டாலும், கூட்டரசு அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கும் முக்கியப் பிரிவுகளான — கூட்டரசு மதமாக இஸ்லாத்தின் நிலை, ஷரியா நீதிமன்றங்களின் அதிகாரம், மலாய் ஆட்சியாளர்களின் இறையாண்மை, மலாய்க்காரர்கள் மற்றும் சபா, சரவாக் பூமிபுத்ராக்களின் சிறப்புரிமைகள் மற்றும் தேசிய மொழியாக மலாய் மொழியின் அந்தஸ்து ஆகிய எதனையும் இந்த ஆணையம் எக்காரணத்தைக் கொண்டும் கேள்விக்குள்ளாக்காது, தடம் புரளாது என்றும் அமைச்சு திட்டவட்டமான உத்தரவாதத்தை வழங்கியுள்ளது.



