
கோலாலம்பூர், ஜூலை-13- காலியாக உள்ள அமைச்சரவைப் பதவிகளை நிரப்ப தற்காலிக அமைச்சர்களை நியமிப்பது தொடர்ச்சியை உறுதிச் செய்வதற்கு மிகவும் முக்கியமானது; குறிப்பாக ஜூலை 21-ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டம் மீண்டும் தொடங்குவதால், இதுவோர் அவசியமான நடவடிக்கையாகும் என தோட்டத்தொழில் மற்றும் மூலப் பொருட்கள் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஜொஹாரி கானி கூறியுள்ளார்.
இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான அமைச்சை தற்காலிகமாக மேற்பார்வையிடும் பணியை ஏற்றுள்ள ஜொஹாரி, அமைச்சுகளின் கீழ் உள்ள அழுத்தமான பிரச்னைகளைத் தீர்க்கவும் தற்காலிக அமைச்சர்களை நியமிப்பது அவசியம் என்றார்.
மக்களவைக் கூடும் போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்; உதாரணத்திற்கு, விரைவில் தாக்கல் செய்யப்பட வேண்டிய 13-ஆவது மலேசியத் திட்டத்தை இறுதிச் செய்ய வேண்டும்; இப்போதைக்கு ஒருவரை தற்காலிகமாக நியமித்தால் மட்டுமே அவ்வேலையை விரைந்து முடிக்க முடியும் என்றார் அவர்.
நிக் நஸ்மி நிக் அஹ்மாட் விட்டுச் சென்ற அமைச்சர் பதவியை கூடுதல் பொறுப்பாக ஜொஹாரி தற்காலிகமாக கவனித்து வருவார் என, வெள்ளிக்கிழமை அரசாங்கத் தலைமைச் செயலாளர் அறிவித்தார்.
முன்னதாக டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி விட்டுச் சென்ற பொருளாதார அமைச்சர் பதவியை இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அமிர் ஹம்சா அசிசான் தற்காலிகமாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டது.
ஜூலை 31-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள 13-ஆவது மலேசியத் திட்டத்தை இறுதிச் செய்யும் முக்கியப் பணி அமிர் ஹம்சாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மே மாத பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் மற்றும் உதவித் தலைவர் பதவிகளைத் தற்காக்கத் தவறியதால், ரஃபிசியும் நிக் நஸ்மியும் அமைச்சரவையிலிருந்து விலகியுள்ளனர்.