கோலாலம்பூர், ஏப்ரல் 30 – உலகமெங்கும் தொழிலாளர்களின் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் மதிப்பளித்துக் கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ம.இ.கா தேசியத் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இந்த தொழிலாளர் தினத்தில் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் பாடுபடுவோம் எனும் உறுதிமொழியை எடுத்துக் கொள்ளுமாறு அவர் வலியுறுத்தியிருக்கின்றார்.
அதற்கு ஏற்ப ம.இ.காவும் தனது பங்குக்குக் களத்தில் இறங்கி, இந்திய சமூகத்திற்கு பல உதவிகளை செய்து வருவதாக கூறியுள்ள அவர் இன்றைக்கு நமது இந்திய சமூகத்தில் பலர் வசதிகளோடு வாழ்வதற்கு, அன்று நமது மூதாதையர்கள், ரப்பர் தோட்டங்களிலும், துப்புறவுத் துறைகளிலும் வழங்கிய உழைப்புதான் காரணம் என்பதை நினைவுப்படுத்தியுள்ளார்.
இதனிடையே, நாட்டிலுள்ள தொழிலாளர் சமூகத்தில், குறிப்பாக இந்திய சமுதாயத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை களைந்து, தேவைப்படும் உதவிகளையும் வாழ்க்கை தரத்தையும் உயர்த்துவதற்கும் தொடர்ந்து பாடுபடுவோம் என இந்த தொழிலாளர் தினத்தில் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் உறுதியளித்திருக்கின்றார்.