“ஆதாரமற்ற பிரச்சாரங்களை நிறுத்துங்கள்”; ஜோகூர் மாநில அரசின் சாதனைகளை ம.இ.கா இளைஞர் பிரிவு தற்காப்பு

ஜோகூர் பாரு, ஏப்ரல்-30,
ஜோகூர் மாநிலத்தில் பாரிசான் நேஷனல் ஆட்சி தோல்வியடைந்து விட்டதாகக் கூறப்படும் கருத்துக்கள் வெறும் அரசியல் கூச்சல்களே தவிர, அதில் உண்மை ஏதுமில்லை என ஜோகூர் மாநில ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர் மோகன் அருணாசலம் சாடியுள்ளார்.
மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காசி தலைமையில் ஜோகூர் மாநிலத்தின் பொருளாதாரம் சிறப்பாக வளர்ந்து வருவதைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமே அங்கீகரித்துள்ளார்.
நிலைமை இவ்வாறிருக்க, அமானா கட்சி உண்மையை மறைத்து மக்களைத் திசைதிருப்ப முயல்வது வியப்பளிப்பதாக அவர் தெரிவித்தார்.
வாழ்க்கைச் செலவின உயர்வு குறித்துப் பேசிய அவர், விலைவாசி ஏற்றம் என்பது உலகளாவிய பொருளாதாரச் சூழல் மற்றும் எரிபொருள் விலையைப் பொறுத்தது என்றும், இது புத்ராஜெயா அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்றும் விளக்கமளித்தார்.
எனவே, மாநில அரசு மீது பழி சுமத்துவதை ஏற்க முடியாது என அவர் கூறினார்.
மக்களைப் பிரச்சாரங்கள் மூலம் ஏமாற்ற முடியாது என்று குறிப்பிட்ட மோகன், ஆதாரமற்ற அரசியலை விடுத்து முதிர்ச்சியான அரசியலை முன்னெடுக்குமாறு வலியுறுத்தினார்.
ஜோகூர் மக்கள் உண்மையை அறிவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.



