
புத்ராஜெயா, ஜூலை-29-சரவாக் கிராமப்புறப் பள்ளிகளுக்கான 1.25 பில்லியன் ரிங்கிட் சூரியசக்தி திட்ட ஊழல் வழக்கில், நீதிபதியை மாற்றக் கோரிய டத்தின் ஸ்ரீ ரொஸ்மா மன்சோரின் இறுதி மறுசீராய்வு மனுவை புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
சபா மற்றும் சரவாக் தலைமை நீதிபதி டத்தோ அஜிசா நவாவி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட குழு, ரொஸ்மாவின் மனுவை ஒருமனதாகத் தள்ளுபடி செய்தது.
நீதிமன்றத் தீர்ப்புகளின் இறுதித் தன்மையைப் பாதுகாக்க இத்தகைய மறுஆய்வு அதிகாரங்கள் மிகவும் அரிதான, விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், ரொஸ்மாவின் மனு அதற்கான சட்டப்பூர்வத் தகுதியைப் பெறவில்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2022-ஆம் ஆண்டு அவருக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிப்பதற்கு முன் கசிந்த தீர்ப்பின் நகலைச் சுட்டிக்காட்டி, ரொஸ்மா இந்த நீதிபதி நீக்க மனுவை முன்வைத்திருந்தார்.
இந்த இறுதிச் சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், ரொஸ்மாவுக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 970 மில்லியன் ரிங்கிட் அபராதத்திற்கு எதிரான மேல்முறையீட்டு விசாரணை வரும் செப்டம்பரில் தொடங்குகிறது.



