
ஈப்போ, ஜூலை-30-பேராக் மாநிலத்தில் புதிய வீடமைப்புத் திட்டங்களுக்கான பூமிபுத்ரா ஒதுக்கீட்டு விழுக்காடு, இனி அந்தந்தத் தொகுதியின் மக்கள் தொகை அடர்த்திக்கேற்ப தீர்மானிக்கப்படும்.
மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சராணி மொஹமட் அதனை அறிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் அமுலுக்கு வந்துள்ள இப்புதிய கொள்கையின்படி, அந்தந்தப் பகுதியின் மக்கள் தொகைக்கு ஏற்ப பூமிபுத்ரா ஒதுக்கீடு குறைந்தபட்சம் 10 விழுக்காட்டிலிருந்து அதிகபட்சமாக 50 விழுக்காடு வரை நிர்ணயிக்கப்படும் என்றார் அவர்.
வாக்காளர் பட்டியலுக்குப் பதிலாக, MySensus எனப்படும் புள்ளிவிவரத் துறையின் அதிகாரப்பூர்வக் கணக்கெடுப்புத் தரவுகள் இதற்குப் பயன்படுத்தப்படும்.
இதன் மூலம், தேவையில்லாத இடங்களில் பூமிபுத்ரா வீடுகள் விற்கப்படாமல் கிடப்பது தவிர்க்கப்பட்டு, வீட்டுமனை மேம்பாட்டாளர்களுக்கு ஏற்படும் இழப்புகளும் தடுக்கப்படும் என சராணி கூறினார்.
அதேவேளையில், பூமிபுத்ராக்களுக்கான 5 மற்றும் 7 விழுக்காடு வீடமைப்பு விலைக்கழிவுகள் எவ்வித மாற்றமுமின்றித் தொடரும் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.



