
செபராங் பிறை, ஜூலை-18- பினாங்கு, செபராங் பிறையில் ஓர் ஆடவர் சரமாரியாகத் தாக்கப்பட்டு, 4WD எனப்படும் 4 சக்கர வாகனத்தில் வலுக்கட்டாயமாகத் தூக்கிப் போடப்படும் வீடியோ டிக் டோக்கில் வைரலாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட நபரை, 3 ஆடவர்கள் தலையிலும் உடம்பிலும் குத்துவதையும், வாகனத்தினுள் தூக்கிப் போடுவதையும் அந்த 2 நிமிட வீடியோவில் காண முடிகிறது.
அச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு 7 மணி வாக்கில் நிகழ்ந்திருப்பதாக நம்பப்படுகிறது.
அடி வாங்கிய நபரை உட்படுத்திய நகைத் திருட்டுப் புகார் காரணமாக அவர் தாக்கப்பட்டிருக்கலாம் என்பது, மாவட்ட போலீஸின் தொடக்கக் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.
பாதிக்கப்பட்டவர், தலையிலும் முகத்திலும் ஏற்பட்ட காயத்திற்காக மருத்துமனையில் சிகிச்சைப் பெற்றார்.
சிகிச்சை முடிந்த கையோடு, ஒரு திருட்டுப் புகார் தொடர்பான விசாரணைக்கு அவ்வாடவர் கைதாகி, 4 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அந்நபரைத் தாக்கிய 3 சந்தேக நபர்களும் தீவிரமாகத் தேடப்பட்டு வருகின்றனர்.
இவ்வேளையில், சந்தேக நபர்களில் ஒருவருக்கும், அரசு சாரா நிறுவனத்தை நடத்தி வருவதாகக் கூறப்படும் ஓர் ஆடவருக்கும் இடையில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் உரையாடல் பதிவும் வைரலாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் கையாளப்பட்ட விதம் குறித்து அவ்விருவரும் தமிழில் வாக்குவாதம் செய்வதை அதில் கேட்க முடிகிறது.
எனினும் இது பற்றி போலீஸ் தரப்பிலிருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.