
கோலாலம்பூர், செப்- 21 -முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக், Langgak Dutaவில் உள்ள அவரது இல்லத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்படுவாரா என்பது குறித்து காவல்துறைக்கு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் கிடைக்கவில்லை.
ஒருவேளை அது குறித்து தங்களுக்கு உறுதியான விவரம் தெரிந்தால் தேவைக்கேற்ப காவல்துறையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என செந்தூல் மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் Anuar Bakri Abdul Salam தெரிவித்தார். நஜிப் எப்போது சிறையிலிருந்து மாற்றப்படுவார் என்பது பற்றிய தகவல் ஏதும் தமக்குக் கிடைக்கவில்லை என அவர் கூறினார்.
இதனிடையே, சாத்தியமான இடமாற்ற நடவடிக்கையை முன்னிட்டு இன்று காலை 7 மணி முதல் நஜிப்பின் Langgak Dutaவில் இல்லம் அருகே நடமாடும் காவல் நிலையம் அமைக்கப்படுகிறது. அது நஜிப்புக்கு 24 மணி நேரப் பாதுகாப்பு வழங்குவதற்காக அல்ல என்றும், இடமாற்றத்தின்போது பாதுகாப்பு, ஊடகங்கள் மற்றும் ஆதரவாளர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல், போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்தல் ஆகியவற்றுக்காக அமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டுக் காவல் அமல்படுத்தப்பட்டால், நஜிப்பைக் கண்காணிக்கும் பொறுப்பு மலேசிய சிறைச்சாலைத் துறையிடம் இருக்கும். காவல்துறை அவரது இடமாற்றத்தின்போது மட்டுமே பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளும் என Anuar தெளிவுபடுத்தினார். சிறைச்சாலைத் துறை அதிகாரிகள் நஜிப்பின் இல்லத்துக்குச் சென்று ஆய்வு மற்றும் மதிப்பீட்டையும் மேற்கொண்டுள்ளனர்.
நஜிப் தனது எஞ்சிய சிறைத் தண்டனையை 2028 ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை வீட்டுக் காவலில் அனுபவிக்க நிபந்தனையுடன் கூடிய மன்னிப்புக்கு மாமன்னர் சுல்தான் இப்ராகிம் முன்னதாக ஒப்புதல் அளித்தார். எனினும், வீட்டுக் காவல் நடைமுறை தொடங்கும் முன் 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என அட்டர்னி ஜெனரல் Tan Sri Mohd Dusuki Mokhtar தெரிவித்திருந்தார்.



