
மலாக்கா, ஆகஸ்ட்-17-நாட்டிலுள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் கூடுதலாக தலா 1 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
மலாக்காவில் நடைபெற்ற பி.கே.ஆர் தேசிய மாநாட்டின் நிறைவில் உரையாற்றிய அக்கட்சியின் தலைவருமான அன்வார், இந்த கூடுதல் நிதி அரசியல் வேறுபாடின்றி நேரடியாக மக்களைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.
பெரிக்காத்தான் நேஷனல் ஆளும் கெடா, கிளந்தான், திரங்கானு போன்ற மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் முற்றாக மறுத்தார்.
எதிர்கட்சி மாநிலங்களுக்கு நிதி வழங்குவதை முன்னர் அம்னோ தலைவர்கள் சிலர் எதிர்த்த போதிலும், மக்கள் நலனே முதன்மையானது என பிரதமர் குறிப்பிட்டார்.
எதிர்கட்சித் தொகுதிகளாக இருந்தாலும், அங்குள்ள ஏழை எளிய மக்களின் நலன் மற்றும் வெள்ளப் பாதிப்பு போன்ற நீண்டகாலப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதே மடானி அரசாங்கத்தின் தலையாயக் கடமை என அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியல் கருத்து வேறுபாடுகளைத் தாண்டி, அனைத்து மலேசியர்களுக்கும் சமநீதியை நிலைநாட்டுவதே அரசாங்கத்தின் முன்னுரிமை என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.



