Latestமலேசியா

நாடு முழுவதும் புகைமூட்டத்தால் உடல்நலப் பாதிப்புகள் அதிகரிப்பு: URTI பாதிப்புகள் 7,065 ஆக உயர்வு

கோலாலம்பூர், அக்-15-நாட்டில் நிலவும் புகைமூட்டம் மற்றும் காற்றுத் தூய்மைக்கேடு காரணமாக, உடல்நலப் பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேல் சுவாசப்பாதை தொற்று (URTI), ஆஸ்துமா மற்றும் கண் அழற்சி பாதிப்புகள் கணிசமாக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad கூறினார்.

36-ஆவது தொற்றுநோயியல் வாரத்தில், URTI பாதிப்புகள் 167 விழுக்காடு அதிகரித்து 7,065 ஆகவும், ஆஸ்துமா பாதிப்புகள் 127 விழுக்காடு உயர்ந்து 1,117 ஆகவும் பதிவாகின. அதே காலகட்டத்தில், கண் அழற்சி பாதிப்புகள் 83 விழுக்காடு அதிகரித்து 334 ஆகப் பதிவானதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, 40-ஆவது தொற்றுநோயியல் வாரத்தில், URTI தொற்று உள்ளிட்ட புகைமூட்டம் தொடர்பான உடல்நலப் பாதிப்புகள் சுமார் 60 விழுக்காடு அதிகரித்து மொத்தம் 5,613 சம்பவங்கள் பதிவாகின. காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு (API) மற்றும் காற்றுத் தரத்தில் ஏற்பட்ட மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 3 முதல் 19 ஆம் தேதி வரை நெருக்கடி தயார்நிலை மற்றும் பதிலளிப்பு மையம் (CPRC) வாயிலாகக் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. மேலும், செப்டம்பர் 4-ஆம் தேதி தேசிய புகைமூட்ட செயல்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டது.

புகைமூட்டத்தால் ஏற்படும் நோய்களைக் கையாள சுகாதார வசதிகளின் தயார்நிலையை அமைச்சு வலுப்படுத்தியுள்ளதாக Dzulkefly தெரிவித்தார். அதன் ஒரு பகுதியாக, பெரியவர்களுக்கான 841 இன்ஹேலர்கள், குழந்தைகளுக்கான 396 இன்ஹேலர்கள் மற்றும் 556 நெபுலைசர்கள் கூடுதலாகத் தயார்படுத்தப்பட்டுள்ளன. தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் கையிருப்பை அமைச்சு உறுதிப்படுத்தி வருகிறது.

இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி-பதில் அங்கத்தில் பேசிய அமைச்சர், காற்றுத் தரத்தைக் கண்காணிக்கவும் அபாயங்களை மதிப்பிடவும் சுற்றுச்சூழல் துறை மற்றும் மலேசிய வானிலை ஆய்வுத் துறையுடன் சுகாதார அமைச்சு இணைந்து செயல்படுவதாகக் கூறினார். காற்றுத் தரம் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!