
பினாங்கு, அக்டோபர் 15 – பினாங்கு பாலத்தில் இன்று அதிகாலை நிகழ்ந்த விபத்தில், 45 வயதுடைய பெண் ஒருவர் படுகாயமடைந்ததுடன், அவரது கணவர் லேசான காயங்களுக்கு உள்ளானார்.
அதிகாலை 3.40 மணியளவில், பெராய் நோக்கிச் செல்லும் பினாங்கு பாலத்தின் 1.3ஆவது கிலோமீட்டரில், அவர்கள் பயணித்த டொயோட்டா ஹைலக்ஸ் (Toyota Hilux) வாகனம், மற்றொரு வாகனமான ஹோண்டா பிஆர்-வி-யுடன் (Honda BR-V) மோதியது.
இந்த விபத்தில், ஹைலக்ஸ் வாகனத்தைச் செலுத்திய பெண், ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக்கொண்டார். அவரது தலை, கால்கள் மற்றும் கைகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. அவருடன் பயணித்த 47 வயதுடைய கணவருக்கும், 38 வயதுடைய ஹோண்டா வாகன ஓட்டுநருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன.
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் அதிகாலை 3.49 மணிக்கு அவசர அழைப்பைப் பெற்றதைத் தொடர்ந்து, பெராய் மற்றும் ஜாலான் பேராக் தீயணைப்பு நிலையங்களின் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி சிக்கியிருந்த பெண்ணை மீட்டனர்.



