
கோலாலம்பூர், அக்டோபர்-15,சிங்கப்பூரில் புகைமூட்டம் மோசமடைந்து வருவதால், சுபாங்–சிங்கப்பூர் இடையிலான விமானச் சேவைகளை அக்டோபர் 16-ஆம் தேதி வரை இரத்துச் செய்வதாக Firefly விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
சுபாங் சுல்தான் அப்துல் அசிஸ் ஷா விமான நிலையத்திற்கும், சிங்கப்பூரின் செலெத்தார் விமான நிலையத்திற்கும் இடையிலான தினசரி 6 இருவழி விமானச் சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே அக்டோபர் 10 முதல் 14-ஆம் தேதி வரை விமானச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டிருந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு, இருக்கை வசதியைப் பொறுத்து மலேசியா ஏர்லைன்ஸ் மாற்று விமானச் சேவைகள் வழங்கப்படும்.
மாற்று விமானச் சேவையை விரும்பாத பயணிகள், முழுக் கட்டணத்தையும் திரும்பப் பெறலாம் என்றும், 30 வேலை நாட்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும் என்றும் Firefly தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் நேற்றிரவு 9 மணி நிலவரப்படி, காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 127 முதல் 203 வரை பதிவாகியது.
200-ரைத் தாண்டிய அளவு, மிகவும் ஆரோக்கியமற்ற காற்றின் தரத்தைக் குறிக்கிறது.



