கோலாலம்பூர், செப்டம்பர் -14, நாட்டில் நீர் தூய்மைக் கேடு அச்சுறுத்தலைக் கையாள சிறப்பு பணிக்குழு அமைக்கப்படுகிறது.
பிரதமர் தலைமையில் நேற்று நடைபெற்ற தேசிய நீர் மன்றத்தின் கூட்டத்தில் அதற்கு இணக்கம் காணப்பட்டது.
பல்வேறு பாதிப்புகளைக் கொண்டு வரும் நீர் தூய்மைக்கேட்டு பிரச்னைகள் உடனடியாகத் தீர்க்கப்பட ஏதுவாக, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அப்பணிக்குழுவில் இடம் பெறுவர் என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நதி நீரின் கண்காணிப்பை மேம்படுத்துவதற்கும், மலேசியாவின் நீர் ஆதாரங்களில் புதிய மாசுபடுத்திகளின் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சியை வலுப்படுத்துவதற்குமான யுக்தியின் ஒரு பகுதியே அப்பணிக் குழு என்றார் அவர்.
திருப்தியற்ற அளவில் இருக்கும் வருவாய் அல்லாத தண்ணீரை குறைப்பதிலும் மடானி அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும் என அவர் சொன்னார்.
தேசிய நீர் மன்றத்தின் கூட்டமானது, மத்திய மற்றும் மாநில அரசுகள் நீர்வள மேலாண்மையை மறுஆய்வு செய்யும் மற்றும் விவாதிக்கும் ஒரு தளமாகும்.