
கோலாலம்பூர், அக் 29 – நெகிரி செம்பிலானில் நீச்சல் குளங்கள் அல்லது கடற்கரையோரம் ஹோட்டல் நடத்துவோர் அடுத்த ஆண்டு முதல் உயிர்காக்கும் பாதுகாவலர்களை வைத்திருக்க வேண்டும். நெகிரி செம்பிலான் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார நடவடிக்கைக் குழுவின் தலைவர் நிக்கோல் டான் ( Nicole Tan ) இதனைத் தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டில் நெகிரி செம்பிலானுக்கு வருகை புரியும் ஏற்பாட்டு நடவடிக்கையில் பின்பற்றக்கூடிய அம்சங்களில் இதுவும் ஒன்று என அவர் கூறினார். 25 ஆண்டுகளில் முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நெகிரி செம்பிலானுக்கு வருகை புரியும் ஆண்டின் பிரச்சாரத்தில் சுற்றுப்பயணிகளிடையே நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சு அனைத்து மாநிலங்களுக்கும் நீர் பாதுகாப்பு பயிற்சிகளை ஏற்பாடு செய்ய உத்தரவிட்டுள்ளது என்று நிக்கோல் டான் கூறினார். ஹோட்டல்கள் மற்றும் அவற்றின் ஊழியர்களின் நலனுக்காக, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையால் பயிற்சிகள் எளிதாக்கப்பட்டு அதில் கலந்துகொள்வோருக்கு சான்றிதழ் வழங்கப்படும். போர்ட் டிக்சனில் நீர் நம்பிக்கை மற்றும் மீட்பு நுட்பங்கள் குறித்த பயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் இத்தகவலை வெளியிட்டார்.