
சிரம்பான், மார்ச் 10 – நெகிரி செப்பிலான் இந்தியர் காற்பந்து குழுக்களுக்கான லீக் காற்பந்து போட்டியை ராசா (Rasah) நாடாளுமன்ற உறுப்பினர் சாய் கீ சின் (Cha Kee Chin) அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மீபா எனப்படும் மலேசியா இந்தியர் காற்பந்து சங்கத்தின் தலைவர் அன்பா, துணைத்தலைவர் ராஜன் மற்றும் மீபாவின் இதர அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இரண்டாவது முறையாக நடைபெறும் இந்த போட்டி A மற்றும் B என இரண்டு பிரிவாக நடத்தப்படுவதால் இப்போட்டியில் எட்டு குழுக்கள் பங்கேற்பதற்கு திட்டமிட்டிருந்தபோதிலும் இதுவரை மொத்தம் ஏழு குழுக்கள் பங்கேற்றன.
லீக் ஆட்டங்கள் இம்மாதம் 29ஆம் தேதிவரை நடைபெறும். அரையிறுதி ஆட்டங்கள் ஏப்ரல் 5ஆம் தேதியும் இறுதியாட்டம் ஏப்ரல் 19ஆம் தேதியும் நடைபெறும்.
நெகிரி செம்பிலான் காற்பந்து சங்கத்தின் ஒத்துழைப்போடு தீவி ஜெயா ( Thivy Jaya ) விளையாட்டு மன்றம் இப்போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.
லீக் முறையிலான இப்போட்டியில் தற்போது A பிரிவில் பூங்கா ராயா A (Bunga Raya A) , நெகிரி இந்தியர் காற்பந்து கிளப், (Bahau Lenggha) காற்பந்து குழு மற்றும் ஜெம்போல் டிரிம்ஸ் (Jempol Dreams) ஆகிய குழுக்கள் இடம் பெற்றுள்ளன .
B பிரிவில் தீவி ஜெயா ( Thivy Jaya ) விளையாட்டு மன்றம் , Onxon FC, பூங்கா ராயா B (Bunga Raya B) ஆகிய குழுக்கள் இடம்பெற்றுள்ளதாக தீவி ஜெயா காற்பந்து கிளப்பின் தலைவரும் நெகிரி காற்பந்து சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினருமான காளிதாசன் சின்னையா தெரிவித்தார்.
இப்போட்டியில் வெற்றியாளர் பட்டத்தை வாகைசூடும் குழுவுக்கு மூவாயிரம் ரிங்கிட் ரொக்கத் தொகை மற்றும் சவால் கிண்ணமும் வழங்கப்படும்.
இரண்டாவது இடத்தை பெறும் குழுவுக்கு 2, 000 ரிங்கிட்டும், மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பெறும் குழுக்களுக்கு தலா ஆயிரம் ரிங்கிட்டும் வழங்கப்படும்.
இதனிடையே சனிக்கிழமையன்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் ஜெம்போல் டிரிம்ஸ் குழு 1- 6 என்ற கோல் கணக்கில் (Bahau Lenggha) அணியிடம் தோல்வி கண்டது.
மற்றொரு ஆட்டத்தில் பூங்காராயா A அணி 5- 1 என்ற கோல் கணக்கில் நெகிரி செம்பிலான் இந்தியர் காற்பந்து குழுவை வீழ்த்தியது.