பெட்டாலிங் ஜெயா, மே 6 – சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவிலுள்ள, பிரபல தனியார் பாலர் பள்ளி ஒன்று, கடந்த பல ஆண்டுகளாக EPF- ஊழியர் சேம நிதியை செலுத்தாமல், தனது தொழிலாளர்களின் எதிர்கால நலனை புறக்கணித்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளது.
ஊழியர் சேம நிதி பங்களிப்பை காரணம் காட்டி, ஒவ்வொரு மாதமும் ஊழியரின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட போதிலும், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக, அந்த பொறுப்பை சம்பந்தப்பட்ட பாலர் பள்ளி நிர்வாகம் நிறைவேற்றவில்லை, என சமூக ஊடக பயனர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.
“அச்சம்பவம் குறித்து, அங்கு வேலை செய்யும் தமக்கு தெரிந்த நபர் ஒருவர் போலீஸ் புகார் செய்துவிட்டார். அங்கு வேலை செய்யும் இதர ஆசிரியர்களும் புகார் செய்துள்ளனர். ஆட்பலத் துறையிடமும் புகார் அளிக்கப்பட்டு விட்டது. எனினும், இன்னும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை” என அந்த பயனர் பதிவிட்டுள்ளார்.
ஊழியர் சேம நிதி என்பது தொழிலாளர்களின் உரிமையாகும். அதனை செலுத்தாமல், அப்பாவி தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். எனவும் அந்நபர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவின் கீழ், சமூக ஊடக பயனர்களுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் சிலரும் கருத்துரைத்துள்ளனர்.
“ஓர் ஆண்டு கடந்து விட்டது. இன்னமும் எதுவும் செலுத்தப்பட்ட பாடில்லை. எல்லாம் வெறும் வாய் வார்த்தை மட்டுமே” என அதில் ஒருவர் சாடியுள்ளார்.
இந்நிலையில், அந்த பதிவு டிக் டொக்கிலும் வைரலாகியுள்ள வேளை ; அந்த பதிவின் கீழும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பலர் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தி வருகின்றனர்.