
குவாந்தான், ஆகஸ்ட் 14 – பஹாங், தாமான் பெருமாஹான் இந்திராபுரா (Taman Perumahan Inderapura) குடியிருப்புப் பகுதியிலுள்ள நீர்வழியில் புகுந்திருந்த 1.5 மீட்டர் நீளமுள்ள பெண் முதலை ஒன்று PERHILITAN அதிகாரிகளிடம் வசமாக சிக்கியது.
கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி பொதுமக்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து, ஐந்து நாட்கள் கோழியை இரையாக வைத்து பொறி அமைக்கப்பட்டது. இதையடுத்து அம்முதலை நேற்று பிடிபட்டது.
சுமார் மூன்று வயதுடைய அந்த முதலை, அருகிலுள்ள சுங்கை பெலாட்டில் (Sungai Belat) இருந்து பெரும் அலை காரணமாக நீர்வழிக்குள் தவறி வந்திருக்கலாம் என PERHILITAN தெரிவித்தது.
பிடிபட்ட முதலை பின்னர் அதன் இயற்கை வாழ்விடத்திற்குள் பாதுகாப்பாக விடப்பட்டது. முதலை தென்பட்டால் பொதுமக்கள் அதை நெருங்கவோ பிடிக்க முயற்சிக்கவோ கூடாது என்றும், உடனடியாக PERHILITAN-க்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



