
இஸ்லாமாபாத், மார்ச்-30-அமெரிக்கா–ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இஸ்லாமாபாத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் எல்லையில் கடும் துப்பாக்கிச் சண்டை வெடித்துள்ளது
துப்பாக்கிகள் மற்றும் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி, ஆப்கானிஸ்தானின் குனார் மாவட்டத்திலும் மற்றும் அதனை ஒட்டியுள்ள பாகிஸ்தானின் பாஜூர் மாவட்டத்திலும் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
அதில், குனாரில் குறைந்தது ஒருவர் உயிரிழந்து, 16 பொது மக்கள் காயமடைந்தனர்; அவர்களில் பெரும்பாலோர் பெண்களும் சிறார்களும் ஆவர்.
பாகிஸ்தானின் தாக்குதல் பொது மக்களை குறிவைத்ததாக ஆப்கான் அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
ஆனால் பாகிஸ்தானோ, ஆப்கானின் தாக்குதலுக்கு மட்டுமே பதிலடி கொடுத்ததாகவும், பொது மக்களை குறிவைக்கவில்லை என்றும் தெளிவுப்படுத்தியது.
பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மாதம் பாகிஸ்தான்–ஆப்கானிஸ்தான் இடையே கடுமையான மோதல் வெடித்தது; இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.
இம்மாதத் தொடக்கத்தில் பாகிஸ்தான் நடத்திய வான் தாக்குதலில், ஆப்கானில் உள்ள போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அதன் பின்னர் ரமலானை ஒட்டி இரு நாடுகளும் தற்காலிகமாக சண்டையை நிறுத்திய நிலையில், தற்போது அது மீண்டும் வெடித்துள்ளது.
மத்திய கிழக்கு சமரச முயற்சிகளில் நடுவர் பங்காற்ற பாகிஸ்தான் முனைந்துள்ள சூழலில், ஆப்கானிஸ்தானுடன் அது எல்லை மோதல்களில் தீவிரமாக ஈடுபட்டு வருவது, சமசர முயற்சிகளைக் கேள்விக் குறியாக்கியுள்ளது.



